×

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குளங்களாக மாறிய சாலைகள்

தூத்துக்குடி, அக். 16: தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் புதிதாக அமைத்த சாலைகள் குளங்களாக மாறிவிட்டன. இதனிடையே செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது.  குறிப்பாக இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 1மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து காலை வரை கொட்டித் தீர்த்தது. இதில்  பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் ஒருநாள் மழைக்கே  தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலைகள் இருந்த இடம்  தெரியாமல் குளங்களாக மாறியுள்ளன. பல்வேறு  பகுதிகளில் கழிவு நீர் ஓடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. இவை ரோடுகள்  மற்றும் வீடுகளின் மட்டங்களை விட அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. இதனால்  மழை நீர் மற்றும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. மேலும்  தூத்துக்குடியில் தற்காலிக பழைய பஸ் நிலையம் முற்றிலும் மழைநீரால்  குளமானது. பகுதியளவில் நெல் நடவு செய்ய தொழி அடித்த வயல்கள் போல மாறி  சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பயணிகள், மாணவ மாணவியர் பலர் சேற்றில்  வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர்.

நகரில் பள்ளமான பல தெருக்களில் மழை  நீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகள்  உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சில்வர்புரம்  பகுதியில் மழைக்கு தாக்குபிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்த 50 ஆண்டுகால  பழமை வாய்ந்த பூவரசு மரம் வேருடன் சாய்ந்தது. இதில் அந்த சாலையில் மரம்  விழுந்ததால் அப்பகுதி வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செந்தியம்பலம்  கிராமத்தில் பலத்த மழை காரணமாக புனித அன்னம்மாள் ஆலயத்திற்குள் மழை  வெள்ளநீர் புகுந்தது. அங்குள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியது. மழை  நீர் வெளியேறும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் மழை நீர் வெள்ளம் சர்ச்க்குள்  புகுந்துள்ளது. அங்குள்ள சாதுராக் தெரு பகுதியில் மழை நீர் செல்ல முடியாமல்  வெளியேறும் பகுதி அடைக்கப்பட்டிருந்ததால் அங்குள்ள  பள்ளி  வகுப்பறைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.  இதே போல் பல்வேறு இடங்களில் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட  நிர்வாகத்திடம் புகார் அளித்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

மின்சாரம் பாய்ந்து மாடு பலி

இதனிடையே மழை காரணமாக   மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  தூத்துக்குடி அடுத்த புதுக்கிராமம் கால்நடை மருத்துவமனை எதிரே  மின்கம்பத்தில் நேற்று காலை மாடு ஒன்று உரசியபோது மின்சாரம் பாய்ந்தது.  இதில் தூக்கிவீசப்பட்ட மாடு பலியானது. அந்த மாட்டுடன் வந்த மற்றொரு மாடு  இறந்துபோன மாட்டின் உடலை மீட்டு எடுத்து  செல்லும்வரையில் அங்கிருந்து அகலாமல் அதே பகுதியில் சோகத்துடன்  நின்றிருந்தது நெஞ்சை உருக்கியது.

நீரில் மூழ்கிய உப்பளங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த பரவலான மழை  காரணமாக வேம்பார் முதல் திருச்செந்தூர் வரை சுமார் 22 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவிலான உப்பளங்களில் பெரும்பாலானவை மழைநீரில் மூழ்கின. இதனால்  உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை அறிவிப்பு தாமதம் நேற்று காலை தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில் காலை 8.30 மணிக்குமேல் தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், காலை 7 மணி முதலே வெளியூர் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே  பள்ளிகளுக்கு புறப்பட்டுச் சென்றனனர். இதனால் அவர்கள் மீண்டும் மழையில்  நனைந்தவாறு திரும்பும் நிலை உருவானது.

Tags : Roads ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...