அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு

வேலூர், அக்.16: அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது என்று உலக கை கழுவும் தின விழிப்புணர்வு விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.அக்டோபர் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக கை கழுவும் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, வேலூர் அரசினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது. முன்னோர்கள் பின்பற்றி வாழ்ந்த சுகாதாரமான உணவுப் பழக்கத்தை மறந்துவிட்டோம். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜி, குடல் புழு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. நோய் தொற்று பாதிப்புகளை தவிர்க்க உடலை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். கை, கால் நகங்களை வெட்ட வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர், மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் பேசினார். பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த அறிவியல் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, சோலார் வாட்டர் ஹீட்டர், சொட்டுநீர் பாசன விவசாயம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், இயந்திர மனிதன், நிலநடுக்கம் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி உட்பட பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>