×

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்யக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, அக்.16: டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை அடுத்த சின்னகலாப்பாடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர் முத்துக்குமார், விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோரை, கடந்த 12ம் தேதி இரவு பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள், கத்தியால் வெட்டி விட்டு 1.65 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட தலைவர் ரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம்(தொமுச), வரதராஜ்(ஏஐடியுசி), வெங்கடேசன்(சிஐடியு) முன்னிலை வகித்தனர். தொமுச மாநில பேரவை பொதுச்செயலாளர் க.சவுந்தரராசன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். கொள்ளை போன விற்பனை பணத்தை நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். விற்பனை பணத்தை நிர்வாகமே நேரடியாக வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், க.மோகன் மற்றும் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, எல்எல்எப், டிபிடிஎஸ், டிஎன்டிஎஸ்ஏ உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Trade unions ,arrest ,robbers ,task force employees ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...