×

ஆரணி அருகே பரபரப்பு தரையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணி, அக்.16: ஆரணி அருகே கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து, தரையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆதனூர், கீழையூர், விருதாட்சிபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 600க்கும் ேமற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பால் ஊற்றி வருகின்றனர். அதன்படி, நாள்தோறும் 1,800 லிட்டர் வரை நேரடியாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக கீழையூர், விருதாட்சிபுரம், காந்திநகர் பகுதிகளில் நேரடியாக பால் கொள்முதல் செய்யவில்லையாம். ஆதனூர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொண்டு வருபவர்களிடம் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அதிகாலை 3 மணி முதலே கூட்டுறவு சங்கம் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும், கூட்டநெரிசல் காரணமாக சரிவர பால் கொள்முதல் செய்யாமல், ஒவ்வொருவரிடமும் 2 அல்லது 5 லிட்டர் மட்டும் பால் கொள்முதல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், வழக்கம்போல் பால் உற்பத்தியாளர்கள் பால் ஊற்றுவதற்காக கூட்டுறவு சங்கத்தின் முன் நேற்று அதிகாலை 3 மணி முதலே காத்திருந்தனர். காலை 7 மணியளவில் வந்த கூட்டுறவு சங்கத்தினர், சிலரிடம் மட்டும் பால் கொள்முதல் செய்து விட்டு சென்றார்களாம். இதனால் ஆத்திரமடைந்த மற்ற பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தின் முன் தரையிலேயே பாலை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியன் வந்து பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பால் உற்பத்தியாளர்கள், ‘பழையபடி ஆதனூர், கீழையூர், விருதாட்சிபுரம் ஆகிய 3 இடங்களில் நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள பால் குளிரூட்டும் அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்' என்றனர். அதற்கு கூட்டுறவு சங்க தலைவர், அனைவரும் ஆதனூர் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்து தான் பாலை ஊற்ற வேண்டும். நேரடியாக வந்து பால் கொள்முதல் செய்ய முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சங்க தலைவரின் அலட்சிய பேச்சால் அதிர்ச்சியடைந்த பால் உற்பத்தியாளர்கள், வேதனையுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Manufacturers ,ground floor ,Arani ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு