×

வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம்

பாபநாசம், அக். 15: வயல்களில் வரப்பு பயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம் என்று பாபநாசம் வட்டார விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 4,300 எக்டேர் பரப்பளவில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக வரப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக வயல் வரப்புகளில் காய்கறி, தீவனப்புல், பயறுவகை பயிர்கள் ( உளுந்து, துவரை) சாகுபடி செய்வதன் மூலம் நெல் வயலில் உகந்த சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டு இயற்கை எதிர்பூச்சிகள் பெருகி ஒரு சமநிலையை பேணுவதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன.

வரப்பு பயிர் சாகுபடி செய்வதால் வரப்பில் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்பில் உள்ள களைகள் தான் சாகுபடி இல்லாத காலங்களில் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. வரப்பு பயிர் சாகுபடி செய்தவன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. அடர் மஞ்சள் நிறமுள்ள பூக்களை தரவல்ல சூரியகாந்தி மற்றும் சென்டிப்பூ பயிர்களை சாகுபடி செய்தவன் மூலம் இயற்கை எதிர்பூச்சிகள் வெகுவாக கவரப்பட்டு பல்கி பெருகும்.

மேலும் இந்த பயிர்கள் கூடுதல் வருமானத்தை தந்து பொருளாதாரத்தை மேம்படுத்தும். காய்கறி பயிரான வெண்டை நமக்கு தேவையான காய்கறி, பயிறுவகை பயிர்கள் உபரி வருமானம் தருவதோடு காற்றில் உள்ள தழைத்சத்தை கிரகித்து நிலை நிறுத்துகிறது. சென்டிப்பூவை வரப்பில் பயிரிடுவதன் மூலம் உபரி வருமானம் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பரப்பில் பயிரிட 100 கன்றுகள் தேவை. இதன்மூலம் 50-100 கிலோ மகசூல் கிடைப்பதன் உபரி வருமானமாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வருமானம் ஈட்டலாம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய பின்னேற்பு மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.150 மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : field ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது