×

மெட்வதேவுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை: பெடரர், நடாலை முந்த வாய்ப்பு

நியூயார்க்: யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் மோதும் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடாலை முந்துவதுடன் ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வெல்லும் ‘காலண்டர் ஸ்லாம்’ சாதனையையும் வசப்படுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறார். அரை இறுதியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (4வது ரேங்க், 24 வயது) மோதிய ஜோகோவிச் (34 வயது, செர்பியா) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்வரெவை திணறடித்த ஜோகோவி 6-2, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.4வது செட்டில் கடுமையாகப் போராடிய ஸ்வெரவ் 6-4 என வெற்றியை வசப்படுத்த சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 5வது மற்றும் கடைசி செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்த ஜோகோவிச் 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என 5 செட்களில் 3 மணி, 34 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். யுஎஸ் ஓபனில் 9வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ள அவர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 31வது முறையாக பைனலுக்கு முன்னேறி ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்துள்ளார். மற்றொரு அரை இறுதியில் ரஷ்ய நட்சத்திரம் மெட்வதேவ் (2வது ரேங்க், 25 வயது) 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிமை (15வது ரேங்க், 21 வயது) வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பரபரப்பான பைனலில் ஜோகோவிச் – மெட்வதேவ் பலப்பரீட்சையில் இறங்குகின்றனர். உலகின் டாப் 2 வீரர்கள் மோதவுள்ள இந்த போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று பெடரர், நடாலுடன் சமநிலை வகிக்கும் ஜோகோவிச், 21வது பட்டம் வென்று அவர்களை முந்துவதுடன் 2021 சீசனில் ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என 4 பெரிய தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்று ‘காலண்டர் ஸ்லாம்’ எனப்படும் மகத்தான சாதனையையும் வசப்படுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறார். முன்னதாக, 1969ல் ஆஸ்திரேலியாவின் ராட் லேவர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மெட்வதேவ் 3வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாட உள்ளார். 2019 யுஎஸ் ஓபன் பைனலில் நடாலிடமும், இந்த ஆண்டு ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடமும் போராடி தோற்ற மெட்வதேவ், தனது 3வது முயற்சியில் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்ற கேள்வியும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது….

The post மெட்வதேவுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை: பெடரர், நடாலை முந்த வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Djokovich Palaperekh ,Medvdev ,Federer ,Nadal ,New York ,Russia ,Danil Medvadev ,US Open ,Djokovich Balaperych ,Medvadev ,Dinakaran ,
× RELATED ‘உண்மையிலேயே அவர் மிகச்சிறந்த வீரர்’: பெடரருக்கு செரீனா பாராட்டு