×

சாலைகள் படுமோசம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது

அருப்புக்கோட்டை, அக்.15: அருப்புக்கோட்டை விவிஆர்.காலனியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அருப்புக்கோட்டை நகராட்சி 8வது வார்டிற்கு உட்பட்டது விவிஆர்.காலனி.  இந்த காலனி உருவாகி 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.  தெருக்களில் ரோடுகள் போடப்படாமல் மோசமான நிலையில் உள்ளது.  கற்கள் பெயர்ந்து தெருக்களில் நடக்கமுடியாத அளவிற்கு ரோடுகள் உள்ளது.  ஒரே ஒரு தெருவிற்கு மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.  மற்ற தெருக்களில் ரோடு இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது.ஒரு சில தெருக்களில் வாறுகால் அமைக்கப்பட்டும் அவற்றை துப்புரவு செய்யாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.  வாறுகால்களை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை.  குப்பைத்தொட்டிகள் தெருவில் இல்லாததால் தெரு ஓரத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வைத்துள்ளனர்.  இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடாக உள்ளது.

 இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ளது.  கழிப்பறையில் உள்ள மின்மோட்டாரை சரிசெய்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தற்போது கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் திறந்தவெளியையே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.  மேலும் இந்த பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் வாரத்திற்கு ஒருமுறை நகராட்சி லாரி மூலம் ஒரு வீட்டிற்கு 12 குடம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.  இதையும் லாரி பழுது என கடந்த 15 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.  தனியார் லாரி மூலம் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.  மேலும் குடிநீருக்காக குடத்துடன் அலைகின்றனர்.  நகராட்சி லாரியை பழுது பார்த்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த பகுதியில் அடிகுழாய்களில் தண்ணீர் நன்றாக வந்து கொண்டிருந்தது.  தற்போது பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும், சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது.  இதனால் தனியார் லாரி மூலம் ஒரு குடம் தண்ணீர் 4 ரூபாய்க்கு வாங்க வேண்டி உள்ளது. இந்த பகுதியில் உள்ள அடிகுழாயை சரிசெய்ய கோரி நகராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.   மேலும் ஒரு மினிபவர் பம்ப் மட்டும் செயல்பாட்டில் உள்ளது.  இதிலும் வாரத்திற்கு ஒருமுறை தான் தண்ணீர் வழங்குகின்றனர்.  இந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை தான் முக்கியமாக உள்ளது.  எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...