×

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு நீண்டநேரம் காத்திருப்பு நோயாளிகள் அவதி

வத்திராயிருப்பு, அக்.15: வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர். வத்திராயிருப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வத்திராயிருப்பு பகுதியிலுள்ள கூமாப்பட்டி, இராமசாமியாபுரம், கான்சாபுரம், பிளவக்கல் அணை, சேதுநாராயணபுரம், மேலக்கோபாலபுரம், மகாராஜபுரம், மாத்தூர், ரெங்கப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து புறநோயாளிகள் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு பகுதியில் சாய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலதாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே டாக்டர்கள் உரிய நேரத்திற்கு வருகிறார்களா என்பதை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், டாக்டர்கள் காலையில் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருகை தந்து சிகிச்சை அளிக்க வேண்டும். டாக்டர்கள் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டவர்கள் வரிசையில் நிற்க கூட முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மேலும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்ய வேண்டும். எக்ஸ்ரேக்கு நிரந்தரமான பணியாளர் இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக பெண் டாக்டர் நியமனம் செய்ய வேண்டும். போதிய மருந்து, மாத்திரைகள் குளுக்கோஸ் உள்ளிட்டவை இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து மருந்து, மாத்திரைகளை அரசு வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Government Hospital ,
× RELATED சென்னையில் ஒரே நாளில் கொரோனா...