×

விவசாயிகள் மனு திருச்சுழியில் கடலையை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

திருச்சுழி, அக்.15: திருச்சுழி பகுதியில் கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருச்சுழி, நரிக்குடி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக மழை பொய்த்ததால் விவசாய நிலங்கள் பராமரிக்கப்படாமல் போடப்பட்டதால் கருவேலம் முட்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் மான், மயில், முயல், காட்டுப்பன்றி என ஏராளமான வன விலங்குகள் இனபெருக்கமாகி அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது திருச்சுழி, நரிக்குடி பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து சோலார் மின்நிலையம் அமைத்துள்ளனர்.   இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் இடமாறி நரிக்குடி பகுதியில் உள்ள மறைக்குளம், நாலூர், குறவைக்குளம், அழகாபுரி, சீனிமடை, உலக்குடி பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன. பலன்தரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் கடலை செடிகளை நாசம் செய்வதால்  விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இப்பகுதியில் செவல் மண் என்பதால்  கடலை விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் பெரும்பாலானோர் கடலை சாகுபடி செய்கின்றனர்.

தற்போது அதிகளவு மழை பெய்யும் என நம்பி பலர் சுமார் 200 ஏக்கர் வரை கடலை பயிரிட்டுள்ளனர். ஓரளவிற்கு மழை பெய்ததால் விவசாயம் செழித்து, பலன் தரும் தருவாயில் உள்ள நிலையில் காட்டு பன்றிகள் மற்றும் விலங்குகள் கடலை செடிகளை கிளறி வீணடிக்கின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் தடுமாறுவதோடு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து நாலூர் விலக்கு விவசாயி மணி கூறுகையில், எங்கள் கிராம பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகளவில் வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. தற்போது விவசாய நிலங்களில் நெல், கடலை, உளுந்து என பல பயிர்கள் பயிரிட்டுள்ளோம். கடலை பலன் கொடுக்கும்  நிலையில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகளவில் உள்ளன. கடலை செடிகளை பறித்து நாசம் செய்கிறது. கடலை செடிகளை பாதுகாக்க காட்டிலே குடியிருக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடும் நபர்களை  காட்டுபன்றிகள் தாக்குகின்றன. இதுவரை பாதுகாப்பில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை பன்றிகள் தாக்கி காயமடைந்துள்ளனர். இதனால் தோட்டங்களை பராமரிக்க வேலையாட்கள் கிடைப்பதில்லை.  விவசாயத்தை காக்கவும், காட்டுப்பன்றிகளை ஒழிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளோம் என ெதரிவித்தார்.

Tags :
× RELATED தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி...