×

பெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது?

கம்பம், அக். 15:  பெரியாறு, வைகையில் போதிய தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க அரசு உத்தரவிருந்தும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்காமல் அரசு தாமதப்படுத்துவது ஏன் என  விவசாயிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
உத்தமபாளையம், போடி வட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள நிலங்கள் மழையை நம்பியுள்ள மானாவாரி நிலங்களாக இருந்தன. இந்த நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம்தான் 18ம் கால்வாய் திட்டம்.  இத்திட்டப்படி லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம், சுத்தகங்கை ஓடை வழியாக கூவலிங்க ஆறுவரை 54.90 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வழியாக பெரியாற்று தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவில் உள்ள 51 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படும். இத்தண்ணீரால் நேரடியாக 6839.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் மறைமுக நிலத்தடிநீர் உயர்வு பெறும்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்புநீர் 6250 மில்லியன் கனஅடியாக இருந்தால், தற்போது புதிய திருத்திய அரசாணைப்படி வினாடிக்கு 98 கன அடிவீதம் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. கடந்த மாதம் கேரளாவிலும், பெரியாறு நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த மழையால் அக் 1ல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாகவும், அணையின் இருப்புநீர் 3726 மில்லியன் கனஅடியாகவும், அதே நாளில் வைகையின் நீர்மட்டம் 58.69 அடியாகவும், அணையின் இருப்புநீர் 3362 மில்லியன் கன அடி என பெரியாறு, வைகை அணைகளின் இருப்புநீர் 7088 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
ஆனால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அரசோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை இல்லாததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், பெரியாறு, வைகை அணைகளின் இருப்புநீர் 6905 மில்லியன் கனஅடி உள்ளது. போதிய நீர் இருந்தும், 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க அரசு ஆணைப்படி அனுமதி இருந்தும் இன்னும் ஏன் தண்ணீர் திறக்கவில்லை என விவசாயிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
இதுகுறித்து 18ம் கால்வாய் விவசாயிகள் கூறுகையில், `` அக்டோபர் முதல் நாளிலேயே பெரியாறு, வைகையில போதிய நீர் இருந்ததால், 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்திருக்கலாம். ஆனால், அரசு செய்யவில்லை. தற்போது நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.15 அடியாகவும், வைகையின் நீர்மட்டம் 60.27 அடியாகவும், பெரியாறு, வைகை அணைகளின் இருப்புநீர் 6905 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. இந்நிலையில், உத்தமபாளையம், போடி வட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில், உடனடியாக 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Vaigai ,canal ,opening ,
× RELATED சித்திரை திருவிழாவின் முக்கிய...