×

தேவகோட்டை பகுதியில் வாகன ஓட்டிகள் செலுத்தும் அபராத தொகை ‘லபக்’? போலீசார் மீது குற்றச்சாட்டு

தேவகோட்டை, அக்.15:  தேவகோட்டை பகுதியில், போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டுனர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை கோர்ட்டில் செலுத்துவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள அலுவலகத்தின் கீழ் தேவகோட்டை நகர், தாலுகா, ஆறாவயல், திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையங்களும் மற்றும் வேலாயுதபட்டணம், புளியால் புறக்காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை முறைப்படி கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், கோர்ட்டில் அபராத தொகையை செலுத்த வரும் போலீசாரிடம், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர்களே நேரில் வந்து அபராத தொகையை செலுத்தினால் தான் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறி நீதிபதிகள் அபராத தொகையை பெற மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கும் மேற்பட்ட அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதுபோன்று கோர்ட்டில் ஒப்படைக்காத அபராத தொகையை முறைப்படி எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
 ஆனால் அபராத தொகையை எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைக்காமல், போலீசார் சிலர் ‘கையாடல்’ செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தேவகோட்டை டிஎஸ்பியிடம் கேட்டபோது, ‘‘அபராத தொகையை செலுத்துவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’’ என்று தெரிவித்தார். இருப்பினும் இது வாகன ஓட்டுனர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்பி மற்றும் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,area ,Devakottai ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி