×

டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இரவு நேரங்களில் பூட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிகிச்சைக்கு வருபவர்கள் சிரமம்

சிவகங்கை, அக். 15:  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகதார நிலையங்களில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் பூட்டப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 ஒன்றிய தலைநகரங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு 35 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கான அனைத்து சிகிச்சைகள் மற்றும் பிரசவமும் பார்க்கப்படுகிறது. பகல் நேரத்தில் 8 மணி நேரம் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இருந்து சிகிச்சையளிக்கின்றனர். மற்ற நேரங்களில் பிரசவம் பார்ப்பது, 24 மணிநேரமும் ஊசிபோடுவது, பரிசோதனைகள் செய்வது, மருந்து, மாத்திரைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செவிலியர்களே செய்கின்றனர்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல நாட்கள் இரவு நேரங்களில் செவிலியர்களும் இல்லாமல் பூட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நாட்டரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் பூட்டப்பட்டிருந்துள்ளது. விபத்து ஒன்றில் முதலுதவி சிகிச்சை செய்வதற்காக இரவு 10 மணிக்கு சென்றவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துள்ளனர். இதுபோல் ஊழியர்கள் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பூட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ‘வாரத்தில் பல நாட்கள் செவிலியர்களை பல்வேறு முகாம் நடத்த அழைத்து சென்று விடுகின்றனர். இதனால் ஏற்கனவே பணி ஓய்வுபெற்ற செவிலியர்கள் சிலர் தற்போதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வந்து ஊசி போடுவது, மாத்திரை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும் டாக்டர்களும் இல்லாமல், போதிய செவிலியர்களும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை பெற வருபவர்கள் கடும் அவதிப்படுகிறோம். இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். எனவே 24 மணிநேரமும் டாக்டர்கள் இருக்கும் வகையிலும், போதிய செவிலியர்களும் பணி நியமனம் செய்யவும் வேண்டும்’ என்றனர்.

Tags : shortage ,health centers ,doctors ,nurses ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை