×

கவனிப்பின்றி கிடக்கும் கால்வாய்கள் இந்த ஆண்டாவது பெரியாறு நீர் முழுமையாக கிடைக்குமா? விவசாயிகள் கவலை

சிவகங்கை, அக். 15:  சிவகங்கை மாவட்டத்திற்கான பெரியாறு பாசன கால்வாய்கள் விரிசலடைந்தும், புதர் மண்டியும் பராமரிப்பின்றி உள்ளன. இதனால் பெரியாறு நீர் முழுமையாக கிடைக்குமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன பகுதியாக உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இருபோக சாகுபடிக்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்ேபாது இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு ஒரு போக சாகுபடிக்கு அக்.9 முதல் நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நீர் திறக்கப்படும் நாட்களில் இதுபோல் அரசு அறிவிப்பு செய்தாலும், மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் சீல்டு, லெஸ்சிஸ், 48 கால்வாய், கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய கால்வாய்கள் வழி திறக்கப்படும். இந்த கால்வாய் அனைத்தும் தற்போது பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் நீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளின் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு மிகக்குறைவான நீர் திறக்கப்பட்ட நிலையில் அந்த நீரும் பல இடங்களில் கால்வாய் சரியில்லாமல் உடைந்து வெளியேறியது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை நீர் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதேநிலை இந்தாண்டு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, ‘நீர் திறப்பதற்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் கால்வாய்கள் பராமரிப்பற்ற நிலையில் இருப்பது வேதணை அளிக்கிறது. உடனடியாக நீர் வரும் வகையில் சீமைக்கருவை மரங்கள், செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளைப்போல் வெறும் அறிவிப்போடு இல்லாமல், இந்த ஆண்டு பெரியாறு நீர் முழுமையாக சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED ஒரு வாரத்திற்கு பிறகு தெளிந்தது இயல்பு நிறத்தில் தாமிரபரணி தண்ணீர்