×

பரமக்குடியில் நிறுத்தத்தில் நிற்காக பேருந்துகள்

பரமக்குடி, அக்.15: பரமக்குடி ஐந்துமுனையில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடம் பகுதியில் பேருந்துகள் நிறுத்தாமல், அதற்கு முன்பே பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இதனால் வெயிலில் நின்று சிரமத்திற்கு உள்ளாகும் பயனிகள். நிழற்குடை கட்டிடம் முன் பஸ்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி ஐந்துமுனை பகுதி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக மதுரை, காரைக்குடி, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் உள்பட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும். இதனால் பேருந்துக்காக தினமும் அதிகளவில் பயணிகள் காத்திருப்பார்கள். மேலும் பஸ் நிறுத்தத்தின் அருகே பள்ளி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், தனியார் அமைப்பு மூலம் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டது. இதுபோதுமானதாக இல்லாததால், பயணிகள் மதிய நேரங்களில் சாலையோரத்தில் காத்திருக்க முடியாமல் அருகில் உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்களில் நின்று வந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ. நிதி உதவியில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. பல லட்சங்களை செலவு செய்து நிழற்குடை அமைத்தும் பேருந்துகள் அங்கு நிறுத்தப்படாமல், சற்று முன்னே நிறுத்துவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.நிழற்குடை முன்னால் உள்ள பாலத்தையொட்டி பேருந்துகள் நின்று செல்வதால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. சிறிய குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நிழற்குடையில் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளும் சில குடிகார ஆசாமிகள், துண்டை விரித்து பயனிகள் அமரும் இடங்களில் படுத்து கொள்வதால் பயணிகள் உள்ளே செல்ல பயந்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள், மது அருந்தி விட்டு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட், பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர்.இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையினை பொதுமக்கள் பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து காவலர்கள் அனைத்து பேருந்துகளும் நிழற்குடை அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து பாண்டியூர் கண்ணன் கூறுகையில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு, அதன் அருகில் பஸ்கள் நிற்காததால், நாங்கள் பேருந்து நிறுத்தத்தை விட்டு முன்னாலேயே நிற்க வேண்டியுள்ளது. மதிய நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வேண்டியுள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சில பஸ் டிரைவர்களிடம் கேட்டால் பஸ் நிற்க வேண்டிய இடத்தில் நீங்கள் நின்றால் எப்படி பஸ்சை நிறுத்த முடியும் என கூறுகின்றனர்.
முறையான அறிவிப்பு செய்து இரண்டு நாட்கள் நிழற்குடை அருகில் பஸ்களை நிறுத்தினால், எல்லாரும் தானாகவே இதை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்றார்.

Tags : Paramakudi ,
× RELATED பரமக்குடி அருகே மர்ம கும்பல்...