×

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு

மதுரை, அக். 15: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் திடீர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.  மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கை 150 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ேகாரிக்கை இந்தாண்டுதான் மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொண்டு, 250 ஆக உயர்த்த அனுமதி அளித்தது. இதனையடுத்து, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து முடிந்த முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கையில் 250 பேர் அனுமதிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரியில் நடந்த ஆள் மாறாட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் நடந்த மாணவர் சேர்க்கையை மீண்டும் சரிபார்க்கும்படி சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். இதன்படி மதுரை மருத்துவக்கல்லூரியிலும் 250 மாணவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்திய மருத்துவக்கவுன்சில் அதிகாரிகள் நேற்று மதுரை மருத்துவக்கல்லூரி வந்தனர். அங்கு கல்லூரி முதல்வர் வனிதா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் தனலெட்சுமி, மருத்துவக்கண்காணிப்பாளர் சங்குமணி, மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  சமீபத்தில் நடந்த 250 மாணவர்கள் சேர்க்கைக்குப்பின், மாணவர்களுக்கு போதுமான வசதிகள் உள்ளதா? சுட்டிக்காட்டப்பட்ட கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அதிகாரிகள் சேகரித்ததாகவும், நீட் தேர்வு மோசடிக்குப் பின் இரண்டாவது முறையாக சரிபார்க்கப்பட்ட மாணவர்களின் சான்றுகளையும் ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப்பணி நேற்று இரவு 8 மணி வரை நடந்தது.

Tags : Indian Medical Council Study ,Madurai Government Medical College ,
× RELATED மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில்...