×

பாலசமுத்திரத்தில் டெங்கு தடுப்பு முகாம்

பழநி, அக். 15: பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை தடுப்பு முகாம் நடந்தது. பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 926 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 6 பேரூராட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், துப்புரண பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.12 புகை அடிக்கும் இயந்திரங்கள், 1 வாகன புகை அடிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி மருந்தடிக்கப்பட்டன. கொசு புழுக்கள் அழித்தல், குப்பைகள் அள்ளுதல், சாக்கடைகள் சுத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

பழநி சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர்.சோமசுந்தரத்தின் உத்தரவின்படி மருத்துவ அலுவலர்கள் தலைமையில் 6 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள், சிகிச்சை முறைகள், வீட்டை சுகாதாரமாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு பிட் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. பாப்பம்பட்டி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ரங்கநாதன் தலைமையில் தெரு தெருவாகச் சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, துணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் காசீம் முஸ்தபா ஆகியோர் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை குறித்து விளக்கமளித்தனர். சுகாதார பணிகளை வட்டார மருத்துவ அலுவலர்கள் ராஜேஸ்வரி, சுரேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், துப்புரவு ஆய்வாளர்கள் கணேசன், ஜாபர் அலி, சித்ராமேரி உள்ளிட்டோர் மேற்பார்வை செய்தனர்.

Tags : Dengue Prevention Camp ,Balasamudram ,
× RELATED பாலசமுத்திரத்தில் மகளிர் சுயதொழில் பயிற்சி முகாம்