ஆத்தூர் அருகே பைத்தூர் மலை கிராமத்தில்

மர்ம காய்ச்சலால் மக்கள் அவதிஆத்தூர், அக்.15: ஆத்தூர் அருகே பைத்தூர் மலை கிராமத்தில் மர்ம காய்ச்சலால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தூர் ஒன்றியம் பைத்தூர் மலை கிராமத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படாததால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தூருக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், மருத்துவ பரிசோதனை வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால், உரிய சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மலை கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பைத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறோம். ஆத்தூர் அரசு மருத்துவமனையில், ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவதால் அங்கு முறையான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் நிலை உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து, மலை கிராம மக்களை காய்ச்சல் பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும். மேலும், மருத்துவர்கள் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : village ,hill ,Paithoor ,Attur ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி...