×

எலச்சிபாளையம் அருகே ஒருமாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் மக்கள் அவதி

நாமக்கல், அக்.15:  நாமக்கல் அருகே, கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரும் பழுதடைந்து விட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்பட்டு வருவதாக, முசிறி காட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த முசிறி அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:  முசிறி அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், காவிரி குடிநீர் விநியோகம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டு விட்டது. ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. இதனால் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. காலை நேரத்தில் விவசாய கிணறுகளுக்கும், ஏளூர் ஊராட்சி பகுதிக்கும் டூவீலரில் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.

இதனால் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கும், வேலைக்கு செல்ல முடியவில்லை. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், காவிரி குடிநீர் விநியோகிக்கவோ, பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யவோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். அதேபோல், நாமக்கல் பெரியப்பட்டி பழைய நரிகுறவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் மெகராஜிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், பெரியப்பட்டி பழைய நரிகுறவர் காலனியில், கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக  10 வீடுகளை அதிகாரிகள் இடித்து விட்டனர். இதனால் வீடுகள் இல்லாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : Elachipalayam ,
× RELATED சாலை விபத்தில் முகவர் பலி