×

டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை கோரி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மேச்சேரி, அக்.15: அரங்கனூர் ஊராட்சி பகுதியில் 25 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாத  ஆபரேட்டரை கண்டித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி அருகே அரங்கனூரில், நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு இடங்களில் உள்ள டேங்குகளுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் என்பவர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் மேட்டுதேருவில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. இதற்கு குடிநீர் எடுத்து விடும் ஆபரேட்டர் கவனக்குறைவே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், குடிநீர் சப்ளையை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 25 நாட்களாக மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ஆபரேட்டரிடம் கேட்டபோது, உரிய முறையில் பதில் தெரிவிக்காமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று அரங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், மேச்சேரி பிடிஓ விரைந்து சென்று விசாரித்தார். அப்போது, பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். மேலும், டிராக்டர் மூலம் உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதன்போில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : blockade ,tank operator ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்