×

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, அக்.15: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில், தேன்கனிக்கோட்டை தாலுகா மருதானப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மருதானப்பள்ளி, வானமங்கலம், மருவே, பாட்சேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்யும் நாங்கள், கடந்த 4 தலைமுறைகளாக சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்த ஆண்டு மட்டும் 4 முறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வேப்பனஹள்ளியில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் வேப்பனஹள்ளியில் செயல்படும் இ-சேவை மையங்கள் சில கட்டி முடித்தும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று சிட்டா, பட்டா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான சான்றுகளை பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் எனவும், சிதிலமடைந்த சாலைகளை சீர்படுத்தி தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே போல், ஊத்தங்கரை பகுதி மக்கள், தங்கள் பகுதியில் பெண்களுக்கு என கட்டிய கழிவறைகள் மூடிக்கிடக்கிறது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவறை வசதி இல்லாத இடங்களில், நவீன கழிவறைகளை கட்டிதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர் பொதுக்கிணறுகளை தூர் வார வேண்டும் என மனு அளித்தனர். அதே போல் சூளகிரி பகுதியில் மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்