×

தேசுப்பள்ளி கிராமத்தில் 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி, அக்.15:  தேசுப்பள்ளி கிராமத்தில் 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார். பர்கூர் ஒன்றியம் தேசுப்பள்ளி கிராமத்தில், 17வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், 2019-20ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 67 ஆயிரத்து 600 பசு மற்றும் எருமையினங்களுக்கு, இன்று (14ம் தேதி) முதல் வருகிற நவம்பர் 3ம் தேதி வரை தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு, தடுப்பூசி போடும் முகாம்களுக்கு அழைத்து சென்று, கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், ஆவின் பொது மேலாளர் குமரன், கால்நடை துறை துணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குநர்கள் டாக்டர் மரியசுந்தர், டாக்டர் அருள்ராஜ் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வரட்டனப்பள்ளி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் திருமுருகன் செய்திருந்தார்.

Tags : Round Gomari Vaccination Camp ,Deshpalli Village ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது