×

கரூரில் கண்காணிப்பு குழு கூட்டம் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தல்

கரூர், அக். 15: கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தினார்.கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் சாதாரண காய்ச்சல் வராமல் தடுப்பது மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுடனான மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது:டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்களால் பரவுக்கூடியது. இந்த வகை கொசுக்கள் வீட்டைச் சுற்றியும், தூக்கி எறியப்பட்ட பயனற்ற டயர்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், டீ கப், தேங்காய் சிரட்டைகள் உட்பட பொருட்களில் தேங்கிய மழைநீரிலும், பயன்பாட்டிற்காக வீட்டில் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தொட்டிகள், பேரல்கள், வீட்டுக்குள்ளே பிரிட்ஜின் பின்பக்கம் உள்ள நீர் சேகரிப்பு பகுதி. ஏர்கூலர்களில் நீர் தேங்கும் தொட்டிகள், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளிலும் உற்பத்தியாகிறது.

எனவே இதுபோன்ற பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்தி பிற சாதனங்களில் உள்ள நீரினை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும் என்ற தகவலை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தேவையற்ற வழியில் நீர் தேங்கியிருப்பதை சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முறையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மைய பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தேவையற்ற வகையில் தண்ணீர் தேங்கியிருக்கிறதா என்பது குறித்து பார்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் குறிப்பிட்ட நாளில் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் கிராமப்பகுதியில் தினமும் காலை 7 மணி முதல் 8,30 மணி வரை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைப்பதோடு, தேவையான கிரிமிநாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் இதனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை இணை இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்.நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஒரு நாளில் குறைந்தது மூன்று கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், சந்தைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும் கொசு பரவாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அலுவலகங்களில் மாடிகளிலும் நீர் தேங்கும் வகையிலான சூழல் இல்லாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களது அலுவலகங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமித்துள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விரிவாக எடுத்துரைத்து, அனைத்து தரப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல அலளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் பாதிக்காத மாவட்டமாக உருவாக்க அனைத்து துறைகளின் அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.கூட்டத்தில் குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் கவிதா, நேர்முக உதவியாளர் செல்வசுரபி, கோட்டாட்சியர் சந்தியா உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tags : Monitoring Committee Meeting ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி