×

தோகைமலை காவல்காரன்பட்டியில் அதிகாரிகள் அதிரடி சோதனை தடை செய்த பிளாஸ்டிக் பை விற்ற கடைகளுக்கு அபராதம்

தோகைமலை, அக். 15: தோகைமலை காவல்காரன்பட்டியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் மற்றும் குட்கா, புகையிலை போன்ற பல்வேறு பொருட்களை கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தது.இதனையடுத்து தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் ஒன்றிய ஆணையர்(கிராம வளர்ச்சி) ராஜேந்திரன் தலைமையில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது தமிழக அரசு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாகுல்ஹமீது மளிகை கடைக்கு ரூ.500, ரவீந்திரன் பேக்கரி கடைக்கு ரூ.1500, ரவிச்சந்திரன் ஓட்டலுக்கு ரூ.1500, மணி மளிகை கடைக்கு ரூ.500, வசந்த் பழக்கடைக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பிளாஸ்டிக் கேரிபேக்குடன் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த கருப்பையா மளிகை கடைக்கு ரூ.5 ஆயிரம் என்று அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கேரிபேக் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில், தோகைமலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள கடைகளில் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆய்வின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா, சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன், ஊராட்சி மன்ற செயலாளர் கலியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
-

Tags : Dohakaimalai Watchlist ,
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...