×

தேர்தலுக்கு ஓட்டிய வாகனங்களுக்கு வாடகை வரவில்லை

திருப்பூர்,  அக். 15: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்  கூட்டம் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில்,  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அளித்தனர். தமிழ்நாடு சுற்றுலா கோச் வேன், மகேந்திர டூரிஸ்ட்டர்,  மேக்சி கேப், கார் உரிமையாளர்கள் - ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில்  அளித்த மனு: திருப்பூர், தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரியின் மூலம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தேர்தல் சமையத்தில் வாகனங்கள் அனுப்பி  வைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு தேர்தல்  பணிக்காக 23 வாகனங்களும், பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு 39 வாகனங்கள் அனுப்பப்பட்டு கடந்த ஏப்.16ம் தேதி முதல் ஏப்.19ம் தேதி வரை ஓடியுள்ளது.  இதில் ஒரு வண்டிக்கு வாடகை ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 வரை என மொத்தம் ரூ.5  லட்சம் 50 ஆயிரம் வரவேண்டியுள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே கலெக்டரிடம் மனு  அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக  எங்களுக்கு சேர வேண்டிய பணம் பெற்று தர வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் சார்பில்  அளிக்கப்பட்ட னு: கடந்த செப். 13ம் தேதி விவசாய நிலத்தில் உயர்மின்  கோபுரம் அமைப்பதற்கு நில அளவைப் பணிக்காக விவசாய நிலத்தில் அத்துமீறி  நுழைந்த வருவாய்த்துறை மற்றும் பவர்கிரீட் நிறுவன அலுவலர்களை எதிர்த்து  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக குண்டடம் போலீசார்  விவசாயிகளை கைது செய்தனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய  சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர்கள், வழக்கறிஞர் ஈசன்,  பி.ஆர்.சண்முகசுந்தரம், முத்து விஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து  ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். ஒரு மாத காலம் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கடந்த அக். 12ம் தேதி  விடுவிக்கப்பட்டனர். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால், ஒட்டுமொத்த  நிலமதிப்பு வீழ்ச்சி அடைந்து விவசாயி தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மேலும் தென்னை, மா உள்ளிட்ட மரம் சார்ந்த பயிர்கள் உற்பத்தி செய்ய  முடியாத நிலை ஏற்படுகிறது. கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் தொடர்ந்து பராமரிக்க  முடியாமலும், எஞ்சி உள்ள விளைநிலங்களுக்கும் சேர்ந்த நீர் ஆதாரத்தை  இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு, ஆடு, மாட்டு கொட்டகைகள்,  கோழிப்பண்ணைகளையும் அகற்ற வேண்டிய இருப்பதால், கால்நடை வளர்ப்பை கைவிட்டு  கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் அவர்கள் ஒப்புதல் இன்றி,  பவர்கிரீட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அதிகாரிகள் அத்துமீறி  நுழைவதை கலெக்டர் தடுக்க வேண்டும். மேலும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான  விவசாய சங்கங்களின் கூட்டியக்க நிர்வாகிகள் மீது தாராபுரம் வட்டாட்சியர்  ரவிச்சந்திரன் பொய்புகார் அளித்துள்ளார். குண்டடம் போலீசாரால் பதிவு  செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் தாராபுரம்  வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர்  அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஏஐடியூசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியூசி,  ஹச்எம்எஸ்,  எம்எல்எப் உள்ளிட்ட  அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று  அளித்த மனு: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலில் சுமார் 6  லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  அவர்களுக்கான சட்ட உரிமைகள் பெரும்பாலான தொழிற்சாலைகளில் முழுமையாக  அமல்படுத்துவதில்லை. ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி வரை உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் அந்நிய செலவாணி ஈட்டித்தரும்  தொழிலாளர்களின் உழைப்பே பிரதானம் ஆகும். அத்தகைய தொழிலாளர்களுக்கு  தொழிலாளர் நலச்சட்டங்களை அனைத்து தொழிற்சாலைகளும் தீவிரமாக அமல்படுத்த  வேண்டும். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக  போனஸ், டைம்ரேட், பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும்  சட்டப்படி தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.  இது குறித்து அனைத்து  தொழிற்சங்கங்களின் சார்பிலும் ஏற்கனவே முன்பு இருந்த கலெக்டரிடம் மனு  அளித்தோம். எனவே தொழிலாளர் நலச்சட்டங்களை  முழுமையாக அமல்படுத்தவும், அமல்படுத்தாத  நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்ய கோரி அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர், தாராபுரம், உடுமலை, குன்னத்தூர்  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை  அமோகமாக நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பலர் தங்கள் வருவாயை  இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள்  மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தடை  செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. எனவே,  போலீசாருக்கு உத்தரவிட்டு லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திருப்பூர், அம்மாபாளையம் அடுத்த  நெசவாளர் காலனியை சேர்ந்த ஜெயகணேஷ் (42) என்பவர் தனது குடும்பத்தினருடன்  அளித்த மனு: நான் பால் பண்ணைத்தொழிலில் செய்து வருகின்றேன். தொழில்  வளர்ச்சிக்காக 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் கந்துவட்டிக்கு கடன்  பெற்றிருந்தேன். அனைவரிடமும் பெற்ற அசல் தொகையைக் காட்டிலும் வட்டி பணத்தை  செலுத்திவிட்டேன். இருப்பினும் மீண்டும் கந்துவட்டி கேட்டு  மிரட்டுகிறார்கள். எனவே, கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர்கள் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியோடு வாழ்ந்து  வருவதால் எங்கள் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசாரிடம் புகார் அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறி இருந்தார்.

Tags : election ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...