×

சிவன்மலை பகுதியில் டெங்கு ஒழிப்புக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அபராதம்

காங்கயம், அக். 15:  சிவன்மலை பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி, சிவன்மலை அடிவாரப்பகுதியில் உள்ள சிவன்மலை, சரவணா நகர் மற்றும் கணபதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தேங்காய் களங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் ஆலைகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில் கூறியிருப்பதாவது: மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள், தேங்காய் களங்கள், அரிசி ஆலைகள், திருமண மண்டபங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கட்டிட உரிமையாளர்களும் இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 2 நாட்களுக்குள் கட்டிட வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் மீண்டும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 உட்பிரிவிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 24 மணி நேரத்தில் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து, மூடிகள் அமைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் குடியிருப்புகளுக்கு ரூ.200, தொழிற்சாலைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .இந்த நோட்டீஸ்களை சிவன்மலை ஊராட்சி பணியாளர்கள் வீடு வீடாகவும், தொழிற்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா