×

காங்கயம் தாலுகா அலுவலகத்தில் வீணாகும் மின்சாரம்

காங்கயம், அக். 15:  காங்கயம் தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர்களே மின்சாரத்தை வீணடித்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் சிக்கனத்தை வலியுறுத்தி அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகள் சிலரின் ஒழுங்கீன நடவடிக்கையால் அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காங்கயம் - கோவை சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அறையில் இல்லாதபோது வீணாக மின் விளக்குகள், மின் விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது.  மின் விசிறி ஓடிக் கொண்டிருந்ததை பார்த்த மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதுபோல தொடர்ந்து மாலை நேரத்தில் மின் விசிறிகள், தேவையில்லாத மின் விளக்குகள் எரிய விடப்படுகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அரசு அலுவலகத்தில், பகல் முழுவதும் மின்சாரத்தை வீணடித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மின் சிக்கனத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்வதை விட அரசு அதிகாரிகள் மட்டத்திலும் எடுத்துரைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...