×

காதர்பேட்டை சந்தையில் பின்னலாடை விற்பனை மந்தம்

திருப்பூர், அக். 15:  திருப்பூர் காதர்பேட்டை பின்னலாடை சந்தைக்கு தீபாவளி பண்டிகைக்காக ஆடை வாங்க வாடிக்கையாளர் வருகை குறைந்ததால் மொத்த ஜவுளி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய பொது மக்கள் மலிவான விலைக்கு ஆடைகள் வாங்க காதர்பேட்டை மொத்த வியாபார கடைகளுக்கு வருவது வழக்கம். காதர்பேட்டை ஜவுளி சந்தைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகளும், நஞ்சப்பா பள்ளி எதிரே உள்ள பனியன் பஜாரில், 80க்கும் மேற்பட்ட கடைகளும், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் உள்ளன. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை ஆடை ரகங்களும், இந்த வர்த்தக மையங்களில், மொத்தமாகவும், சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. டி-சர்ட், காலர் சர்ட், பேன்ட், பர்முடாஸ், இரவு நேர ஆடை, ஆண்கள், பெண்கள் உள்ளாடை ரகங்கள், குழந்தைகள் ஆடை, என அனைத்து வகையான பின்னலாடை ரகங்களும் இங்கு கிடைக்கிறது.

இங்கு திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, சேலம், கரூர் என வெளிமாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள், சிறு, குறு வர்த்தகர்கள் காதர்பேட்டை கடைகளில், ஆடை ரகங்களை வாங்கி செல்கின்றனர். ராஜஸ்தான், குஜராத், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் காதர்பேட்டையில் சொந்தமாக கடைகள் வைத்துள்ளனர்.  இவர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள ஜவுளிக்கடைகளுக்கு தேவையான ஆடைகளை திருப்பூரிலிருந்து லாரி, ரயில் மூலம் அனுப்பி வருகின்றனர். இதனால், வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால் தமிழக மொத்த வியாபார கடைகளுக்கு வியாபாரம் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 12 நாட்கள் உள்ள நிலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் வழங்காமல் உள்ளது.

மேலும் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு முறையான சம்பள கட்டமைப்பு இல்லாததாலும், வேலை நிரந்தரம் இல்லாததாலும், போனஸ் வழங்கினால் அடுத்த நாளே தங்களுடைய சொந்த மாவட்டம், மாநிலங்களுக்கு செல்வதை தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்குவதை தொழில் நிறுவனங்கள் கடைபடித்து வருகின்றனர். இதனால், காதர்பேட்டை வர்த்தக சந்தைக்கு வாடிக்கையாளர்கள், சிறு வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...