×

கோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்

கோவை, அக். 15: கோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை அரசு, தனியார் பேருந்துகள் புறக்கணித்து மேம்பாலம் வழியாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை -பொள்ளாச்சி  நான்கு வழிச்சாலை திட்டத்தில், கிணத்துக்கடவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தில், இலகு ரக, கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மேம்பாலத்தின் மீது செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக பேருந்துகள் வழக்கம் போல் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து, பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், சமீபகாலமாக இச்சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலத்தின் வழியாக, கோவை, பொள்ளாச்சி நோக்கி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் கோவை, பொள்ளாச்சி செல்லும் பயணிகள், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
சில அரசு மற்றும் தனியார் பஸ்கள், கிணத்துக்கடவுக்குள் செல்லாமல் இயக்கப்படுவதால். கோவை உக்கடம் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கிணத்துக்கடவு செல்லும் பயணிகள் பஸ்சில் ஏற வேண்டாம் என பயணிகளிடம் தெரிவித்து பஸ்களில் அனுமதிப்பதில்லை. இதனால், கிணத்துக்கடவு பயணிகள் பொள்ளாச்சி, கோவை பஸ் ஸ்டாண்டில், அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பயணிகள் சரியான நேரத்திற்கு வேலைக்கும், வீட்டுக்கும் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : bus stand ,Kinathukadavu ,road ,Coimbatore ,Pollachi ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி