×

வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டல்

கோபி, அக்.15:  கோபி அருகே புறம்போக்கு நிலத்தில் உள்ள 78  வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் கேன்குழி பகுதியில் சுமார் 4.76 ஹெக்டேர் பரப்பளவில் அரசு வாய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 200 குடும்பங்கள்  வசித்து வருகின்றன. இவர்களில் 122 குடும்பத்திற்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டுமனை பட்டா வழங்கினார். மீதமுள்ள குடும்பத்தினருக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. ஆனால், அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவை  வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுப்பணித்துறையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டுமனை பட்டா இல்லாத 78 குடும்பத்தினரையும் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டதுடன் அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.அதில், இது குறித்து ஆட்சேபனை இருந்தால் வரும்  25ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டரிடம் நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் தெரிவித்தனர். அவர் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன்பின், எம்.பி. சுப்பராயன் நிருபர்களிடம் கூறுகையில், `பல ஆண்டுகளாக வசித்து வரும் 78 குடும்பத்திற்கும் அனைத்து அடையாள அட்டைகளும் வழங்கப்பட்ட நிலையில் வீடுகளை காலி செய்ய மிரட்டுவது ஏற்க முடியாது. வீடுகளை காலி செய்ய முயன்றால் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், `பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களது வீடுகளை காலி செய்ய சொல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இப்பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை