×

குரூப்-2 பாடத்திட்டத்தை மாற்ற கோரி மாணவர்கள் மனு

ஈரோடு, அக்.15: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் நேற்று மனு அளித்தனர். ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறோம். ஏற்கனவே, உள்ள வினாத்தாளுக்கான பாடத்திட்டப்படி படித்துள்ளோம். இதற்காக, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவிட்டுள்ளோம். தற்போது போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம், தொகுதி-2, 2-அ போன்றவைகளில் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, மொழி பெயர்ப்பு பகுதி, அப்பகுதியில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பிற விடைத்தாள்கள் திருத்தப்படும் என்பதும் சிக்கலானது. அதில், பல கலைச்சொல் கடினமாக, மொழி கையாளப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியம், ஆங்கில மொழி மாற்றம், முச்சங்கம், மூவேந்தர் போன்றவைகளை மொழி பெயர்ப்பது, கலை சொல் பயன்படுத்துவது சிரமமாகும். சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பள்ளிகளில் படித்துவிட்டு, போட்டி தேர்வுக்கு வருவோருக்கு மட்டுமே இது சாத்தியமாகும். கடந்த 5 போட்டி தேர்வுகளில், வினாத்தாள் எடுத்தபோதே, பல தவறுகள் இருந்ததை நீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளது. அந்த அளவுக்கு, டி.என்.பி.எஸ்.சி.யிலேயே தவறு நடக்கும் நிலையில், புதிய பாடத்திட்டதை நாங்கள் கற்று, அதை புரிந்து விடை எழுதி தேர்ச்சி பெறுவது சிரமமாக உள்ளது. கடந்த சில ஆண்டாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கில் படித்து வந்த நிலையில், அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்பட்டதால், மீண்டும் நாங்கள் முதலில் இருந்து படிக்க வேண்டி உள்ளது. ஆகவே, குரூப்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கதிரவன், இதுபற்றி அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

Tags : Group-2 ,
× RELATED குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு...