×

புஞ்சை புளியம்பட்டியில் புத்தக திருவிழா நாளை துவக்கம்

சத்தியமங்கலம் அக்.15: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 8வது புத்தக திருவிழா நாளை (16ம் தேதி) முதல் 20ம் தேதி வரை நகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இது குறித்து விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது:இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா நாளை முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இக் கண்காட்சியில், 20க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.  பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதில், பங்கேற்க அனுமதி இலவசம்.வாசகர்கள் வாங்கும் அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். தினமும் மாலை 6  மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்குபெறும் மாலை நேர கருத்தரங்கம் நடக்கிறது.

16ம் தேதி பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், 17ம் தேதி சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமி ஹரிவர்தனந்தரின் சொற்பொழிவு, அதைத்தொடர்ந்து, கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்தியாலயம் மாணவர்கள் பங்கேற்கும் சுவாமி விவேகானந்தர் வாழ்கை வரலாற்று நாடகம் நடக்கிறது.இதில், எழுத்தாளர் சித்த மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர்கள் ஈரோடு கதிர், பவா செல்லத்துரை, ஊட்டி மலைச்சொல், கலை இலக்கிய சமூக மைய அமைப்பாளர் பாலநந்தகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். 20ம் தேதி புன்செய் புளியம்பட்டி புத்தக கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 500 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் வசந்த் எஸ்.சாய்  பங்கேற்று விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.




Tags : Book festival ,Punjai Puliyampatti ,
× RELATED தேனியில் இரண்டாவது புத்தக திருவிழா...