×

கூலி உயர்வு கேட்டு தூய்மைக் காவலர்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், அக்.15: கூலி உயர்வு கேட்டு தூய்மைக் காவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகளிலும், வீதிகளிலும் தேங்கும் குப்பைகளை அகற்ற தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து இயற்கை உரமாக்குவது இவர்களின் பணி. 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டு கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் மாதம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கூலி, துப்புரவு தொழிலாளர்களுக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலியை விடக் குறைவாக உள்ளது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில் தூய்மை காவலர் சங்கத்தினர் நேற்று சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சத்தியமங்கலம் நடராஜ், பவானிசாகர் ராஜேந்திரன், தாளவாடி மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க தலைவர்கள் வெங்கடாசலம், மோகன்குமார், சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று மையங்களிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் பங்கேற்றனர்.


Tags : Cleanup guards ,
× RELATED பாத்திர தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு