×

சீராக குடிநீர் விநியோகிக்ககோரி காலிகுடங்களுடன் பெண்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

பாவூர்சத்திரம், அக். 15:  சீராக குடிநீர் வழங்கக்கோரி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எழில்நகர், பெரியார் நகர், சத்யா நகர், மகாத்மா காந்தி நகர், நேரு நகர் போன்ற பகுதிகள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு மேலப்பாவூர் குளங்களில் உள்ள கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் சீராக குடிநீர் வழங்கக் கோரி இதே பகுதியை சேர்ந்த ராமசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள், காலிக்குடங்களுடன்  பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் பார்த்திசாரதியிடம்  வழங்கினர்.மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி  நிர்வாகத்திடம் பேசி ஓரிரு நாட்களில் சீராக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Siege ,women ,towers ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது