×

இடைத்தேர்தலுக்கு பின் நாங்குநேரி தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும்

களக்காடு, அக். 15:  இடைத்தேர்தலுக்குப் பிறகு நாங்குநேரி தொகுதி மிகப்பெரிய  வளர்ச்சி பெறும்.உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து  திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நாராயணன்  பெற்றுத் தருவார் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மஞ்சுவிளை, கீழபத்தை, சிங்கிகுளம், கீழகாடுவெட்டி, தெற்கு காடுவெட்டி, அப்பர்குளம், மீனவன்குளம், துவரைகுளம்  உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஒரு விவசாயி வீட்டுப்பிள்ளையை தமிழகம் முதல்வராக பெற்றுள்ளது. ஒரு எளிமையான முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு தொடர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

நாங்குநேரி  தொகுதியில் சாதாரண தொண்டனை அதிமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை  நீங்கள் மாபெரும் வெற்றி பெறச்செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நாராயணன் பெற்றுத் தருவார். தேர்தலுக்குப் பிறகு நாங்குநேரி தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று சிலர் கூறினர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. அவரது ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.  நாங்குநேரி தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவரால் இந்த தொகுதி வளர்ச்சியடையவில்லை. பல கிராமங்களில் அடிப்படை வசதிகளை கூட வசந்தகுமார் செய்து கொடுக்கவில்லை. நாங்குநேரி தொகுதியில் களக்காடு ஒன்றியத்தில் அனைத்து கிராம சாலைகளும் உறுதியாக அமைத்து தரப்படும். அனைத்து கிராம சாலைகள் அமைக்கும் பணிகளை நானே கண்காணிப்பேன். கிராம மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், மீன்பிடி தொழிலாளர்கள், கட்டுமான, வாகன தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு எடப்பாடி அரசு  சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கி வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் இந்த தொகுதி மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு கொடுத்த ஜெ. வழியில் செயல்படும் எடப்பாடி அரசிற்கு வலுசேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். பிரசராத்தில் எம்எல்ஏக்கள் (சாத்தூர்) ராஜவர்மன், (வில்லிபுத்தூர்) சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், களக்காடு ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் பாபு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : by-election ,constituency ,Nunguneri ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...