×

மணமேல்குடி பகுதிகளில் வரத்துவாரிகள் ஆக்கிரமிப்பால் வறண்டு கிடக்கும் குளங்கள்

மணமேல்குடி. அக்.15: மணமேல்குடி பகுதியில் குளங்களுக்கு மழைநீர் செல்லும் வரத்து வாரிகள் எல்லாம் ஆக்கிரமிப்பாலும், வாய்க்காலை சுருக்கி வீடுகள் கட்டப்பட்டதாலும் சிலவாரிகள் மண்ணால் மூடப்பட்டதாலும் தண்ணீர் முழுமையாக குளங்களுக்கு சென்றடையாமல் குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. மணமேல்குடி மஞ்சல்குளம் வண்ணான்குளம் பத்தக்காடுகுளம் ஜெகதீஸ்வரர்குளம், பொன்னகரம் ஆதிகேசவ பெருமாள்குளம் மற்றும் தாலுகா கிராங்களில் உள்ள குளங்கள் என 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. வறட்சி நிறைந்த பகுதியாக இருந்தாலும், எப்போதாவது பெய்யும் மழையால் இக்குளங்களில் தண்ணீர் எப்போதும் நிரம்பியே இருக்கும். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் இக்குளங்களில் குளிப்பதற்கு பயன்பட்டு வந்தது. மேலும், குளங்களில் தண்ணீர் இருந்ததால் அந்த குளங்களை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கும், குளிப்பதற்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதாலும், அவ்வபோது பெய்த மழைதண்ணீரும் முறையாக குளங்களுக்கு செல்ல வழியில்லாமல் தடை ஏற்பட்டதாலும் குளங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.

இந்நிலையில் இக்குளங்களுக்கு மழைநீர் செல்லும் அனைத்து வரத்து வாரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதனால் குளங்களுக்கு மழைநீர் முழுமையாக செல்ல வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இதனால் குளங்களில் தண்ணீர் வற்றி வறண்டு போய்விட்டன. குளங்களில் தண்ணீர் இல்லாமல் போனதால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டு போனதோடு, இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகள் கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலைஏற்பட்டுள்ளது. இதனால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும், நீர் மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்த வரத்துவாரிகள் ஆக்கிமிப்புகளால் ஏற்கனவே பெய்த மழைநீர் குளங்களுக்கு சென்றடையாமல் குளங்கள் எல்லாம் வற்றி குடிநீருக்கும் மற்ற உபயோகத்திற்கும் மக்கள் தண்ணீர்... தண்ணீர்... என கூக்குரலிட்டாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே நிலத்தடிநீர் மட்டத்தைஉயர்த்தும் விதமாக போர்காலஅடிப்படையில் மழைநீர் குளங்களுக்கு முறையாக முழுமையாக சேமிக்கும் வகையில் குளங்களை சுத்தம் செய்தும், மண்ணால் மூடிய வரத்துவாரிகளை தூர் வாரியும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வரத்துவாரிகளை மீட்கவும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : areas ,Manamalgudi ,
× RELATED ஏரி, குளங்களில் களிமண் எடுக்க...