×

குளிக்கும்போது மண் சரிந்து கிணற்றில் புதைந்த மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை, அக்.15:  ஊத்துக்கோட்டை அருகே கிணற்றில் குளிக்கும்போது மண் சரிந்ததில் புதைந்த மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் இரவு 7 மணி வரை மாணவனை மீட்க முடியாததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். ஊத்துக்கோட்டை அருகே பிளேஸ்பாளையம் ஊராட்சி கெங்குலு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர்கள் சந்தோஷ் (12), சசி (8),  வாசு (8), யுகேந்தர் (16). இவர்கள் 4 பேரும்  அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்நிலையில்,  நேற்று முன்தினம்  பள்ளி விடுமுறை என்பதால், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 80 ஆண்டு கால பழமையான 50 அடி ஆழமுள்ள  கிணற்றில்   குளிக்கச் சந்தோஷ் உள்பட 4 பேரும் சென்றனர்.  அவர்கள், காலை 10.30 மணி அளவில் குளித்துக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கிணற்றை சுற்றி மண் சரிவு ஏற்பட்டது.  இதில், குளித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் 4 பேரும்  சிக்கிக்கொண்டனர்.  

இதையறிந்த, அதே கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சசி, வாசு, யுகேந்தர் ஆகிய 3 மாணவர்களை லேசான காயங்களுடன் மீட்டார். மேலும், சந்தோஷை மட்டும் மீட்க முடியவில்லை. உடனே, அவர் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார்  திருவள்ளூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவயிடத்திற்கு 12 மணிக்கு வந்த தீயணைப்பு துறையினர்,  அலுவலர் பாஸ்கரன்  தலைமையில்  சந்தோஷை தேடும் பணியில்   ஈடுபட்டனர். ஆனால், மாலை 6 மணி ஆகியும் சந்தோஷ் கிடைக்காததால் தற்காலிகமாக தேடும் பணியை நிறுத்தி வைத்தனர்.

அதையடுத்து இரவு முழுவதும் கிணற்றில் இருந்த நீரை மோட்டார் மூலம்  வெளியேற்றினர். பின்னர், 2வது நாளான நேற்று பிற்பகல் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மதியரசன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றை சுற்றியுள்ள மண்ணை  அகற்றிவிட்டு  சந்தோஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு 7மணி வரை தொடர்ந்து பணி நடந்தும் மாணவனை மீட்க முடியவில்லை. இதையடுத்த மண் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கும் என  போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.    

Tags : student ,well ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...