×

நிலுவை தொகை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர், அக். 15:   திருவெண்ணெய்நல்லூர் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலத்தில் நிலுவைத்தொகை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.  விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், 2019ம் ஆண்டிற்கான பருவகால கரும்பு அரவை உடனடியாக துவங்கவும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் சர்க்கரை கிலோ ரூ. 35 விலையை குறைத்து ரூ. 25ஆக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் ஆலையின் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் சங்க கொடிகளையும், வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகளையும் கையில் ஏந்தி ஆலை நிர்வாகத்தின் அவல நிலையை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஜோதிராமன் கண்டன உரையாற்றினார். இதுகுறித்து, தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சங்க பிரதிநிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு பணம் இல்லாததால் போராட்டத்தில் கலந்துகொண்ட 75 விவசாயிகளுக்கு மட்டும் ஒரு நபருக்கு அவரின் நிலவை தொகையிலிருந்து தலா 10ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள நிலுவை தொகையை அனைவருக்கும் தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக வழங்கி விடுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் ரூ. 25 விலைக்கு சர்க்கரை வழங்குவதாகவும், 2019க்கு கரும்பு அரவையை விரைவில் துவங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து விவசாயிகளும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sugarcane farmers ,
× RELATED நிலுவை தொகை வழங்ககோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்