×

பொதுப்பணித்துறை விடுதி வளாகத்தில் நிற்கும் பழுதடைந்த வாகனங்களால் கொசு உற்பத்தி அபாயம்

மதுராந்தகம், அக். 15: மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சியில் உள்ள, பொதுப்பணித் துறை பயணியர் விடுதியில், துருப்பிடித்த சாலை அமைக்கும் இயந்திரங்கள் கொசு உற்பத்தி மையமாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி மற்றும் அலுவலக வளாகம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் மற்றும் அதற்கு தேவையான இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை, மழை, வெயில் போன்றவற்றினால் பாழ்பட்டும் துருப்பிடித்தும் போய் கிடக்கின்றன. இந்த இயந்திரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து செல்லும் உயர்மட்ட கால்வாய்களை அமைக்க சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்பு அந்த இயந்திரங்கள் அப்படியே இங்கு நிறுத்தப்பட்டு வீணாகி பயனற்று கிடக்கின்றன.

குறிப்பாக, இந்த ஒவ்வொரு இயந்திரத்திலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு, தேங்கும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் டெங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சலுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, பல ஆண்டுகளாக இங்கு சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி வரும் இந்த வீணாகிப்போன இயந்திரங்களை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பணிக்கு வரும் எந்த ஒரு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த சுகாதார சீர்கேடு குறித்து கவலை கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு வருடம், இரண்டு வருடம் ஐந்து வருடம் என்றால் பரவாயில்லை, சுமார் முப்பது வருடங்களாக இப்பகுதியில் இந்நிலை நீடிப்பதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பாழாய்ப்போன இயந்திரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வரும் மழை காலங்களில் இந்த இயந்திரங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறான சூழ்நிலையை தடுக்க அதிகாரிகள், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழைய பொருட்களை தேவையில்லாமல் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். இதனால், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன என அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரம், வீடு வீடாக வந்து சோதனை என கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அப்போது, வீட்டில் கிடக்கும் தேங்காய் ஓடுகள், ஆட்டுக்கல், தண்ணீர் ஊற்றி வைக்கும் டிரம்புகளை சோதிக்கின்றனர்.

இங்கு, தேவையில்லாமல் பல ஆண்டுகளாக சாலை போடும் இயந்திரங்களை நிறுத்தி வைத்து அதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்யும் மையமாக விளங்குகிறது. மேலும், இங்கு உற்பத்தியாகும் கொசுக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுகிறது. அதிகாரிகளின் இந்த செயல் ‘ஊருக்கு தான் உபதேசமே தவிர, அது எங்களுக்கு இல்லை’ என்பதைபோல் உள்ளது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...