×

திருப்போரூர் புறவழிச்சாலை பணிக்காக செம்பாக்கம் ஏரியில் விதிகளை மீறி மண் எடுப்பு

திருப்போரூர், அக். 15: பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர்  நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலவாக்கத்தில்  இருந்து ஆலத்தூர் வரை புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான  பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலைப்பணிக்காக விவசாய நிலங்களில் சுமார்  5 அடி உயரத்திற்கு மண் கொட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்போரூரை  அடுத்துள்ள செம்பாக்கம் ஏரியில் மண் எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம்  அனுமதி அளித்தது. இதையடுத்து செம்பாக்கம் ஏரியில் கடந்த 10 நாட்களுக்கும்  மேலாக ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளும் பணி நடைபெற்று  வருகிறது. மாவட்ட நிர்வாகம் விதித்த நிபந்தனைகளின்படி 3 அடி ஆழத்திற்கு  மட்டுமே ஏரியில் மண் அள்ள வேண்டும். ஆனால் 10 முதல் 15 அடி ஆழத்திற்கு மேல்  மண் எடுக்கப்படுகிறது. மேலும் இந்த மண்ணை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு  மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை காற்றில் பறக்க விட்டு ஒரு லோடு  ஏரி மண் 4500 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

இதனால் 24  மணி நேரமும் அதாவது இரவிலும் ஒளிரும் மின் விளக்குகள் போடப்பட்டு மண்  அள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஒரு  நாளைக்கு 500 லாரிகளில் இந்த மண் அள்ளப்படுகிறது. ஒரு ராட்சத லாரியில்  சுமார் 30 டன் ஏரி மண் எடுத்துச் செல்லப்படுகிறது. செம்பாக்கம் ஏரியில்  இருந்து கிணறு தோண்டப்பட்டு செம்பாக்கம், அச்சரவாக்கம் ஆகிய  கிராமங்களுக்கும் திருப்போரூர் பேரூராட்சிக்கும் குடிநீர் எடுத்துச்  செல்லப்படுகிறது. மேலும், செம்பாக்கம் ஏரியினை நம்பி சுமார் 350 ஏக்கர்  விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. விதிகளை மீறி மண் அள்ளப்படுவதால்  மழை பெய்து நீரை தேக்கி வைத்து அவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில்  சிக்கல் ஏற்படும் என்றும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்  அபாயம் இருப்பதாகவும் பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே, பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் செம்பாக்கம் ஏரியில் நேரடி  ஆய்வு மேற்கொண்டு இந்த சட்டவிரோத மண் அள்ளுவதை தடை செய்ய வேண்டுமென  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தூசு மண்டலமாக மாறும் அவலம்  
 
ஏரியில் அள்ளப்படும் மண் திருப்போரூர் நகரப்பகுதி வழியாக எடுத்துச்  செல்லப்படுகிறது. இதன் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலை, தெற்கு மாடவீதி,  வடக்கு மாடவீதி, கிழக்கு மாடவீதி, நெம்மேலி சாலை போன்றவை தூசு மண்டலமாக  மாறி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.  மேலும், பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ராட்சத  லாரிகள் செல்வதால் இதற்காக போடப்பட்ட குழாய்கள், கான்கிரீட் மூடிகள் பல  இடங்களில் உடைந்து விட்டது.

Tags : lake ,Sembakkam ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்