×

2 பேர் மீது வழக்கு காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரிய குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாக்க வேண்டும்

காரைக்கால், அக்.15: காரைக்கால் மாவட்டத்தில் தூர்வாரிய குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல், குப்பை கொட்டாமல் பாதுகாக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சுமார் 250 குளங்களை கண்டறிந்து, அவற்றில் முதல் கட்டமாக சுமார் 166 குளங்களை, நம்நீர் திட்டத்தின் கீழ், அரசுத்துறை, தனியார் தொழிற்சாலை நிர்வாகம், கோயில் நிதி மூலம் தூர்வாரி, அனைத்து குளத்தின் கரைகளிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் திருநள்ளாற்றை அடுத்த சேத்தூர் பண்டாரவாடை கிராமத்தில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குளத்தை, திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவில் நிதி மூலம் அண்மையில் தூர்வாரும் பணி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் பணி நிறைவு பெற்றதையடுத்து, குளத்தில் காவிரி நீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமை வகித்தார். கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, காவிரி நீரை குளத்தில் திறந்துவிட்டு, குளத்தின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் கூறியது: புதுச்சேரி முதல்வர், ஆளுநர் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில், 250க்கு மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் சுமார் 166 குளங்கள், அரசுத்துறை நிதி, கோவில் நிதி, தனியார் தொழிற்சாலை சமூக பொறுப்புணர்வுத்திட்ட நிதி மூலம் தூரவராப்பட்டு, அவற்றின் வடிகால்கள் கண்டறியப்பட்டு, அவையும் தூர்வாரப்பட்டு வருகிறது. முக்கியமாக, அனைத்து குளத்தின் கரைகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி அளவில், காரைக்கால்தான் குளம் தூர்வருதல் மரக்கன்றுகள் நடுதலில் முதன்மையான பகுதியாக உள்ளது. இந்த நேரத்தில், பொதுமக்கள் செய்ய வேண்டியதெல்லாம், மாவட்ட நிர்வாகம் தூர்வாரிய குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல், குப்பைகளை போடாமல், மிகுந்த அக்கறையோடு பாதுகாக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இன்னும் பல குளங்களை மாவட்ட நிர்வாகம் ஆவலுடன் தூர்வாரி உங்களிடம் ஒப்படைக்கும் என்றார்.

Tags : district ,Karaikal ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...