கிறிஸ்தவ நீதிப்பேரவை கலை இலக்கிய போட்டிகள் நவ.1ல் நடக்கிறது

நாகர்கோவில், அக்.15:  கிறிஸ்தவ நீதிப்பேரவை தலைவர் ஜாண் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கிறிஸ்தவ நீதிப்பேரவையின் சார்பில் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு, தனி நபர் மற்றும் குழு பாடல் போட்டிகள் அழகியமண்டபம் பொன்னரசி திருமண மண்டபத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் ஏபிசிடிஇ என ஒவ்வொரு பிரிவிலும் பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், பன்முக தன்மை என்பது யாதெனில் என்ற தலைப்பில் கவிதை போட்டியும், கூட்டுக்குடும்ப வாழ்வு என்ற தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியானது பிரிவு வாரியாக அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ், நீர் நம் உயிர் நாடி, சமூக நீதி காப்போம், குமரி இணைப்பு ஒரு வரலாற்று பார்வை ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளது.

தேச பக்தி பாடல்கள் தனி நபராகவும், குழுவாகவும் பாடும் போட்டியும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம். போட்டியாளர்கள் தங்கள் பெயர் பதிவை பள்ளி கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்துடன் போட்டி நாளன்று காலை 9 மணிக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஏ பிரிவாகவும், 6 முதல் 8 வரை பி, 9, 10க்கு சி, 11, 12 மற்றும் ஐடிஐக்கு டி பிரிவாகவும், பிற கல்லூரி வகுப்பினர் அனைவரும் இ பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் துவக்க நிலை, இடைநிலை, கல்லூரி நிலை என்று மூன்று சுழற்கோப்பைகள் வழங்கப்படுகிறது. முதல் மூன்று இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கு தனி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அன்று மாலையில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Christian Justice Art Literary Competition ,
× RELATED வேறு இடத்திற்கு மயானத்தை மாற்றுங்கள்...