×

இலவச லேப்டாப் வழங்கக்கோரி விருத்தாசலம் அரசு பள்ளி முற்றுகை

விருத்தாசலம், அக். 15: இலவச லேப்டாப் வழங்கக்கோரி விருத்தாசலம் அரசு பள்ளியை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2018-19ம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2017-18ம் ஆண்டில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை லேப்டாப் பெறாமல் இருந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க இருந்த சூழ்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது அவர்களை சமாதானப்படுத்திய மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் இன்னும் மூன்று மாதத்திற்குள் விடுபட்டவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது மூன்று மாதம் முடிவடைந்தும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் லேப்டாப் வழங்குமாறு முன்னாள் மாணவர்கள் கேட்டுள்ளனர். அப்போது தங்களுக்கு எந்தவித அரசாணையும் இதுவரை வரவில்லை. தற்போது கையிருப்பில் மடிக்கணினிகள் எதுவும் இல்லை, அதனால் நீங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள் என கூறியுள்ளார். அதன்படி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்ற மாணவர்கள் அங்கு கேட்டபோது, எங்களுக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் தர வேண்டும், அதன் அடிப்படையில்தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர். இதனால் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று திடீரென பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப்களை வழங்காமல் எங்களுக்கு பின் வந்த மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகள் வைத்தும் எங்களுக்கு லேப்டாப் வழங்குவதில் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.

இதனால் நாங்கள் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகள் எழுதுவதற்கும், பாடப்பிரிவுகள் சம்பந்தமாக சந்தேகங்களை லேப்டாப்களில் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் கடந்த இரண்டு வருடமாக அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் சம்பந்தப்பட்ட கல்வித்துறை நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன்பேரில் சமாதானம் அடைந்த மாணவர்கள் கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, விரைவில் எங்களுக்கு மடிக்கணினி வழங்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பிப் பார்க்கும் வகையில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனக்கூறி எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Providence ,
× RELATED இன்று 3வது டி20 போட்டி; தொடரை கைப்பற்ற...