×

தாழக்குடி அருகே சுகாதாரக்கேடு ஏற்படும் விதத்தில் குப்பை எரித்தவருக்கு 25 ஆயிரம் அபராதம் கேரள இறைச்சி கழிவுகள் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஆரல்வாய்மொழி,  அக் .15:  தாழக்குடி அருகே பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும்  விதத்தில் குப்பைகளை கொட்டி எரித்தவருக்கு பேருராட்சி நிர்வாகம் ரூ.25  ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. தாழக்குடி  சந்தைவிளை அருகே ஆன்றோ என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து தினம்  கரும்புகையுடன் சுகாதார கேடு ஏற்படும் விதத்தில் பயங்கரமான துர்நாற்றம்  வீசுகிறது. இது பற்றி அவரிடம் தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும்  எடுப்பதில்லை. பல இடங்களில் இருந்தும் தினமும் பல  டிம்போக்களில் கழிவு குப்பைகளை பாலிதீன் கவர்களில் கொண்டு வந்து இங்கே  போட்டு எரிக்கின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் சார்பில் தாழக்குடி பேரூராட்சி செயல்  அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செயல் அலுவலர் யோக  , சுதாதார ஆய்வாளர் அய்யா குட்டி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு  சென்று ஆய்வு நடத்தினர். அங்கு பல டன் குப்பைகள் பாலீதின் கவரில்  போட்டு எரித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது. இந்த குப்பைகள் எங்கிருந்து  வருகிறது என்று சம்மந்தபட்டவரிடம் கேட்டதற்கு முறையான பதிலும் தெரிவிக்க  மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இங்கு கேரளாவில் இருந்து கோழி மற்றும் மாமிச கழிவுகள் கொண்டு வந்து கொட்டி எரிக்கப்படுவதாகவும், கேரள கழிவுகளை கொண்டுவர தடை இருந்தாலும் இப்படி கழிவுகளை கொண்டு வருவதற்கு பின்னால் சில புரோக்கர்கள் செயல்படுவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி செயல்  அலுவலர் யோக  கூறியதாவது: இப்பகுதியை சுற்றி அதிகமாக பொதுமக்கள்  குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்றோ என்பவர் தன்னுடைய இடத்தில் பல  அடி ஆழத்திற்கு செங்கல் சூளைக்காக மண் எடுத்துவிட்டு அந்த பள்ளத்தை  நிரப்ப, பல இடங்களில் இருந்தும் டன் கணக்கில் கழிவு குப்பைகளை தடை செய்யப்பட்ட  பாலீதின் கவர்களில் அடைத்து கொண்டு வந்து கொட்டி தீயிட்டு  எரித்து வந்துள்ளார். இதனால் இப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி நோய் பரவும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் தினமும் பல டிம்போக்களில் கழிவுகளை கொட்டுவதாகவும் தெரிகிறது. ஆனால்  எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது பற்றி கேட்டால் முறையான பதில்  தர மறுக்கிறார். எனவே அவருக்கு ரூ.25  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தினங்களுக்குள்  இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவேண்டும். இல்லை  என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளதாக கூறினார்.

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு