×

நாகர்கோவில் மாநகரில் பொது குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கும் பணி தொடக்கம் சாலை ஓர பைப்புகளில் இனி தண்ணீர் பிடிக்க முடியாது

நாகர்கோவில், அக்.15 : நாகர்கோவில் மாநகரில் சாலை ஓரங்களில் உள்ள பொது குடிநீர் குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.நாகர்கோவில் மாநகராட்சிக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 11 மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
மாநகராட்சியில் மக்கள் தொகை சுமார் 3 லட்சம் ஆகும். மாநகர பகுதிக்கு குடி தண்ணீர் விநியோகிக்க 700 பொது குடிநீர் நல்லிகளும், சுமார் 35 ஆயிரம் தனியார் வீட்டு இணைப்புகளும் உள்ளன. இதன்படி மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 23 மில்லியன் லிட்டர் குடி தண்ணீர் தேவையாக உள்ளது. இதனை முக்கடல் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரால் ஈடு செய்ய முடிய வில்லை. இதனால் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மேலும் 10 மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளும் பயன்பெறும் வகையில், இவை அமைக்கப்பட உள்ளன.

 தற்போது பாதாள சாக்கடை பணிகளால் குடிநீர் குழாய்கள், மேன்ஹோல்கள் உடைந்து மக்களை மிரட்டி வரும் நிலையில், புதிய குடிநீர் விநியோகத்திற்காக 130 கி.மீ தொலைவுக்கு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. புத்தன் அணை குடிநீர் திட்டம் 2020க்குள் முடிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.  இதற்காக மாநகர பகுதிகளில் குடிநீர் இணைப்பு குழாய்கள் புதிதாக பதிக்கப்பட்டு வருகின்றன. புத்தன் அணை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில், பழைய குடிநீர் குழாயில் தண்ணீர் சப்ளை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் தற்போது உள்ள பொது குடிநீர் நல்லிகள் அனைத்தும், இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி சாலை ஓரங்களில் உள்ள பொது குடிநீர் நல்லிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் பல முக்கிய சந்திப்புகளில் பொது குடிநீர் நல்லிகள் உள்ளன. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நேரடியாக இவற்றுக்கு தண்ணீர் சப்ளை இருந்ததால், 24 மணி நேரமும் தண்ணீர் வினியோகம் இருக்கும். மின்சார பற்றாக்குறை, குடிநீர் குழாய்கள் பழுது போன்ற நேரங்களில் மட்டும் குடிநீர் சப்ளை இருக்காது.

நாகர்கோவிலில் உள்ள பல ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு பொது குடிநீர் நல்லிகள் தான் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதால், இனி சாலை ஓரங்களில் உள்ள குடிநீர் நல்லிகளில் தண்ணீர் எடுக்க முடியாது. இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது குடிநீர் நல்லிகளின் இணைப்புகள்  இப்போது துண்டிக்கப்படாது. மற்றபடி சாலை ஓரங்களில் உள்ள குடிநீர் நல்லிகளின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்களை கழுவ குடிநீரை பயன்படுத்துகிறார்கள். குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகவும் செல்கிறது. இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புத்தன் அணை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, நாகர்கோவில் மாநகருக்கு தினமும் குடிநீர் சப்ளை இருக்கும். இதனால் சாலை ஓரங்களில் உள்ள பொது குடிநீர் நல்லிகள் தேவை இருக்காது என்றார்.

Tags : Nagercoil City ,
× RELATED மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள்...