×

வெள்ளை பூச்சி தாக்குதலால் பெரும் பாதிப்பு லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழியும் அபாயம் விவசாயிகளுக்கு மேலும் பேரிடி

நாகர்கோவில், அக்.15: குமரியில் திடீரென வெள்ளை பூச்சி தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு  வருவது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுக்கு 6 முறை தேங்காய் வெட்டப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் பல மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. குமரியில் ரப்பருக்கு அடுத்த படியாக தென்னை சாகுபடி தான் அதிகமாக உள்ளது. தென்னையை சார்ந்து பல்வேறு தொழிற் கூடங்களும் இயங்கி வருகின்றன. கடந்த 2017 ல் வீசிய ஓகி புயலின் போது மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்தன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். தேங்காய் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வறட்சி கோர தாண்டவம் ஆடியது.

ஓகி புயல், வறட்சி என அடுத்தடுத்து தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஓரளவு நிலைமையை சமாளிக்கலாம் என்று தென்னை விவசாயிகள் நினைத்துள்ள நிலையில், தற்போது புது வித நோய் தாக்குதலால் தென்னைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தென்னை ஓலையின் கீழ் பகுதியில் ஒரு வித வெள்ளை பூச்சிகள் ஒன்றிரண்டு முதலில் விழுகிறது. பின் அந்த ஓலை முழுவதும் வெள்ளை பூச்சிகள் படர்கின்றன.  இதனால் ஓலையின் மேற்பகுதியில் உள்ள பச்சை நிற தன்மை குறைந்து, ஓலை முழுவதும் கருப்பு நிறமாக மாறுவதுடன், அந்த ஓலை உயிரற்ற தன்ைமக்கு சென்று விடுகிறது. மேலும் மரத்தில் வருகின்ற பூவில் தேங்காய் பிடிக்காமல் உதிர்ந்து விடுகின்றன. பல மரங்களில் பூவே வராமல், மட்டை உள் பகுதியில் பொடித்தும் விடுகின்றன. இந்த பூச்சி தாக்குதலால் நன்றாக காய்க்கின்ற மரங்களும் காய்க்கும் தன்மையை இழந்து வருகிறது.
தென்னந்தோப்புகளில் ஊடு பயிராக இருக்கும் வாழை, சிறு தானியங்கள், கொய்யாமரம், மா மரம், பலா மரம், நெல்லி, சப்போட்டா போன்றவற்றிலும் இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது. சில இடங்களில் இந்த பூச்சி தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்கள் மஞ்சள் நிறத்திலும் மாறி விடுகின்றன. இந்த பூச்சி தாக்குதல் தென்னந்தோப்பு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பேரிடியாக மாறி உள்ளது.

ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி சுற்று வட்டார பகுதிகளிலும், அகஸ்தீஸ்வரத்தில் சில பகுதிகளிலும், குருந்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் இதன் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. இது குறித்து வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். மாவட்ட கலெக்டரிடமும் நேரடியாக தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் இந்த பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு அழிந்து வருவதாக கூறிய விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேடியாக எல்லா பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு, இந்த பாதிப்பு எதன் காரணமாக ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வெள்ளை பூச்சிகள் தாக்குதலில் இருந்து எப்படி தென்னை மரங்களை காப்பாற்ற முடியும் என்பது பற்றி ஆய்வு செய்து, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளிக்க வேண்டும்

இந்த பிரச்சினை குறித்து, ராஜாக்கமங்கலம் வட்டார முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஏ.பி. அசோக் ராஜ் கூறியதாவது :குமரி மாவட்ட மக்கள் 90 சதவீதம் பேர், தென்னை மரங்களை நம்பி தான் உள்ளனர். ஒரு குடும்பத்தில் 10 அல்லது 15 தென்னை மரங்கள் இருக்கும். அதை வைத்து தான் வீட்டு செலவை நடத்தி வருகிறார்கள். அடிப்படை வருமானமும் தென்னையை வைத்து தான் உள்ளது. மகன், மகள் திருமண செலவு, குடும்ப செலவு, மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் தென்னையை வைத்து வரும் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக ஓகி புயல், வறட்சியால் தென்னை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெள்ளை பூச்சி தாக்குதலால் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. எனவே தென்னை மரத்தை காப்பாற்றி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். பக்கத்து மாநிலமான கேரளாவில் இது போன்ற நோயின் தாக்கம் இருந்த போது, ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளித்து ஓரளவு நிலைமையை சமாளித்தனர் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே குமரி மாவட்டத்திலும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்ெகாள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும்  வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : millions ,pest attack ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...