×

தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ஸ்பிக்நகர், அக். 15: தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 31 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலம்  துவங்கியுள்ளதையடுத்து டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். இதன்படி முள்ளக்காடு, அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதை துவக்கிவைத்து மாவட்ட நகர்நல அலுவலர் அருண்குமார் பேசுகையில், ‘‘டெங்கு கொசு உற்பத்தியாக 30 மிலி தண்ணீர் போதுமானது. இதனுடைய வாழ்நாள் 21 முதல் 30 நாட்கள்.கொசு உற்பத்தியாகி 7 முதல் 10 நாட்களில் கொசுக்கள் முட்டையிடஆரம்பிக்கின்றன. ஒரு கொசு தன்னுடைய வாழ்நாளில் சுமார் 1000 முட்டைகள் இடுகின்றன. இந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளர்கிறது. எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகே நல்லதண்ணீர் தேங்கிநிற்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதேபோல் நிலவேம்பு குடிநீரானது ஒவ்வொரு மாணவருக்கும் தொடர்ந்து 5 நாட்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முகாமில் தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், உதவித் தலைமை ஆசிரியை கலாவதி என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : school children ,Tuticorin ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...