×

9 கவுண்டர்கள் இருந்தும் 2 மட்டுமே இயங்கின நாகர்கோவிலில் மின் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பு பொதுமக்கள் கொதிப்பு

நாகர்கோவில், அக்.15:   நாகர்கோவிலில் மின் வாரிய கட்டண வசூல் மையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. முதல் 100 யூனிட் இலவசமாகும். அதன் பின் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் பிரதி மாதம் 15ம்தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு, மின் கட்டணம் குறிக்கப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாற்றப்பட்டது. நாகர்கோவிலில் டிஸ்லரி ரோட்டில், மின்வாரியம் சார்பில் பிரதான மின் கட்டணம் வசூல் மையம் உள்ளது. வடசேரி, கிருஷ்ணன்கோவில், ஒழுகினசேரி, வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, பார்வதிபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ளவர்கள் இங்கு தான் மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். இங்கு மின் கட்டணம் வசூலிக்க, 9 கவுண்டர்கள் இருந்தன.  மின் கட்டணம் செலுத்தும் முறை மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து இவற்றில் 6 கவுண்டர்கள் மூடப்பட்டன. ஏதாவது 3 கவுண்டர்கள் மட்டும் இயங்கும். நேற்று காலை 8.30 மணி முதல் வழக்கம் போல் மின் கட்டண வசூல் தொடங்கியது. திடீரென ஒரு கவுண்டரில் கம்ப்யூட்டர் பழுதாகி விட்டதால், 2 கவுண்டர்கள் மட்டுமே இயங்கின.

ஏற்கனவே கடந்த 6, 7, 8 ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாளாகி விட்டன. இடையில் 4 நாட்கள் மட்டுமே கட்டண வசூல் மையம் இயங்கியது. பின் 13ம் தேதி (ஞாயிறு) விடுமுறை ஆனது. இதனால் நேற்று (திங்கள்) மின் கட்டணம் செலுத்த காலை முதல் கூட்டம் அலைமோதியது. இரு கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சர்வரும் மிக மெதுவாக இயங்கியதால், கட்டணத்தை பதிவு செய்து ரசீது வழங்க அதிக நேரம் ஆனது. பின்னர் பகல் 12 மணியளவில் பழுதான கம்ப்யூட்டரை சரி செய்யும் பணிகள் நடந்தன. இது குறித்து அங்கிருந்த மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம் என்ற நிலை வந்த பின், ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து விட்டனர். 9 கவுண்டர்களில் 3 கவுண்டர்களுக்கு மட்டும் ஊழியர்கள் உண்டு. இவற்றில் ஒரு கம்ப்யூட்டர் திடீரென பழுதாகி விட்டது. வெளியே உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து தான் மெக்கானிக் வரவழைத்து சரி செய்து  வருகிறோம். மின் வாரியத்துக்கான சர்வரும் மெதுவாக தான் இயங்குகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் செயல் இழந்த...