×

மாணவர் சேர்க்கை 150 ஆக அதிகரிக்க அனுமதி கிடைக்குமா? குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு

நாகர்கோவில், அக்.15 : கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை 150 ஆக அதிகரிப்பது தொடர்பாக, மருத்துவ கவுன்சில் குழு நேற்று ஆய்வு நடத்தினர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2001 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக்கல்லூரியில் தற்போது ஆண்டு தோறும் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு உயர் தர சிகிச்சை பிரிவுகள் உள்ளன.  மயக்கவியல், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு உயர் மருத்துவ படிப்பும் உள்ளது. நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 700க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளியாக இருக்கிறார்கள். சமீபத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இங்கு வெற்றிக்கரமாக நடந்தது. இந்த மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வந்தன. டாக்டர்கள் குடியிருப்பு, செவிலியர்கள் குடியிருப்பு, நூலகம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதி வசதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 60 சதவீதம் வரை முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து மருத்துவ கவுன்சில் குழு நேற்று, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். டீன் பாலாஜி நாதனுடன் ஆலோசனை நடத்திய இந்த குழுவினர் பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தனர். வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவ, மாணவிகள் விடுதிகள், டாக்டர்கள், நர்சுகளுக்கான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு சிகிச்சை பிரிவுகள், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு திட்ட பிரிவுகளை பார்வையிட்டனர். இந்த குழுவில் டாக்டர்கள் ஆர்.ஜி. கமல், ராஜேஷ் சர்மா, மகேஸ்வர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பின்னர் மருத்துவ கூட்ட அரங்கில், டாக்டர்களின் சான்றிதழ்கள், சிகிச்சை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பயிற்சி மருத்துவர்களின் சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டன. டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். இன்று 2 வது நாள் ஆய்வு செய்கிறார்கள். மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இன்று பார்வையிட உள்ளனர். இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி  துணை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜெயலால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Kumari Government Medical College ,Medical Council Committee Study ,
× RELATED கட்டாய கல்வி சட்டத்தில் 5,752 மாணவர் சேர்க்கை