×

மணவாளக்குறிச்சி அருகே மாயமான பள்ளி மாணவன் சவுக்கு தோப்பில் சடலமாக மீட்பு

குளச்சல், அக். 15:  மணவாளக்குறிச்சி அருகே மாயமான பிளஸ் 1 மாணவன், சவுக்கு தோப்பில் சடலமாக  கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கி ெகாண்டு இருந்தது. மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை மாவிளை பகுதியை சேர்ந்தவர்  ஐயப்பன். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவரது மகன் சபின் (17). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில்  பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 10ம் தேதி காலை முதல் மாணவன் சபினை  காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர்  பல்வேறு இடங்களில் தேடினர். உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும்  எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மணவாளக்குறிச்சி காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து, மாணவன் சபினை தேடி வந்தனர். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி  கடந்த 5ம் தேதி முதல் 8ம்தேதி வரை பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு  இருந்தது. பின்னர் 9ம் தேதி சபின் பள்ளிக்கு செல்ல வில்லை. இதனால்  அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மறுநாள் (10ம்தேதி) முதல் அவர்  மாயமானதால், பெற்றோர் கண்டித்ததால் வேறு எங்காவது சென்று இருப்பார்? என்ற  ரீதியில் வெளியூர்களில் உள்ள உறவினர்களிடமும் விசாரித்து வந்தனர். இந்த  நிலையில் முட்டம் தேரி பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் சிறுவன் ஒருவரின்  சடலம் அழுகிய நிலையில், தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதை நேற்று முன்தினம் மாலையில்  அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பார்த்தனர்.

இது குறித்து அவர்கள்  மணவாளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  சடலமாக கிடந்தவருக்கு 17 ல் இருந்து 20 வயதுக்குள் இருந்ததால், இது மாயமான  சபினாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோருக்கு தகவல்  தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை  பார்த்ததும் கதறி அழுதனர். அதன் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில்  கிடந்தது சபின் என்பது உறுதியானது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சபின் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டாரா? அல்லது அவரது மரணத்தில் வேறு  காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவில்லை.  பிரேத பரிசோதனைக்கு  பின்னரே சபின் எப்படி இறந்தார் என்பது பற்றி உறுதியாக கூற முடியும் என  போலீசார் கூறி உள்ளனர். சபின் பிணமாக தொங்கிய இடம் சவுக்கு தோப்பு ஆகும்.  அங்கு ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்காது. எப்போதாவது ஒருமுறை தான் அந்த  பகுதியை சேர்ந்தவர்கள் செல்வது உண்டு. அந்த இடத்துக்கு சபின் ஏன்  சென்றார் என்பது தெரிய வில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் சென்று  இருப்பாரா? அல்லது வேறு யாராவது அவரை அழைத்து சென்றார்களா? என்ற  கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மாயமான சபின் சடலமாக மீட்கப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Manavalakurichi ,
× RELATED மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்