×

சிவகாசியில் இருந்து சென்னைக்கு பட்டாசு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து: கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி,..தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சிவகாசியில் இருந்து சென்னைக்கு பட்டாசு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள்  அணிவகுத்து நின்றன. கண் எரிச்சல், மூச்சு திணறலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆண்டுதோறும் ஆங்காங்கே கடைகள் அமைத்து பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதற்காக,  சிவகாசியில் இருந்து முன்னதாகவே பட்டாசுகளை லாரியில் கொண்டு வந்து, குடோன்களில் வைக்கப்படும். அதன்படி, சிவகாசியில் இருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் லாரி, நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டது.  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே லாரி சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி, பட்டாசு ஏற்றி வந்த லாரியை முந்தி சென்றபோது உரசியது. இதில், பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்து எரிய  தொடங்கியது.

இதை பார்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் கீழே குதித்து தப்பியோடிவிட்டார். பலத்த காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. லாரியில்  இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. அந்த நேரத்தில், லாரியின் பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள், இதை கண்டு அதிர்ச்சியடைந்து, அப்படியே நின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில்  வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசைக்கட்டி நின்றன. மேலும், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.

தகவலறிந்து மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது.
புகாரின்படி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் யார். எந்த கம்பெனியில் இருந்து பட்டாசு ஏற்றி வந்தார். லாரி உரிமையாளர் யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Chennai ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து